மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷா நீக்கப்பட காரணம் என்ன..? வெளியான தகவல்

what-is-the-reason-for-prithvi-shaws-removal-from-the-mumbai-team-information-revealed
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-20 22:01:00

மும்பை,

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார். மேலும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியிலிருந்தும் உடல் தகுதி மற்றும் ஒழுங்கீனம் காரணமாக கழற்றிவிடப்பட்டார்.

இருப்பினும் அதற்கு அடுத்து நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இதனால் எதிர்வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.

இதனிடையே மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு "சொல்லு கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும். 65 இன்னிங்சில் 3,399 ரன்கள் (உள்நாட்டு ஒரு நாள் போட்டிகளில்) சராசரி 55.7 மற்றும் ஸ்டிரைக் ரேட் 126 வைத்துள்ளேன். ஆனாலும் நான் நல்ல ஆட்டக்காரன் இல்லையா?" என பிரித்வி ஷா தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மையாக காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருடைய செயல்கள்தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம். பீல்டிங் செய்யும்போது பந்து அவருக்கு அருகில் வந்தால் கூட அதை பிடிப்பதற்கான முயற்சியை அவர் செய்வதில்லை. பேட்டிங்கிலும் பந்தை எட்டி அடிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்.

அவருடைய உடற்தகுதி, ஒழுக்கமின்மை, அணுகுமுறை எல்லாமே மிகவும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற அலட்சியமான வீரரை அணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே நீக்கினோம். சமூக வலைதள பதிவுகள் மூலமோ, தேர்வாளர்களை திசை திருப்புவதன் மூலமோ மீண்டும் அவரை அணியில் இணைத்து விட முடியாது. ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது.

சையத் முஷ்டாக் அலி தொடரின்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்பாடு செய்த மீட்டிங்குகளில் அவர் அமரவில்லை. அதேபோன்று நாங்கள் அவருக்காக ஏற்பாடு செய்த உடற்தகுதி மீட்டிங்குகளிலும் அவர் அமரவில்லை. இப்படி தொடர்ச்சியாக அனைவரையும் உதாசீனப்படுத்திவரும் அவரை இனி மாநில அணிக்காக விளையாட வைக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம்" என்று கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next